சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி மீண்டும் பல்கலைக்கு செல்லும் கீதா கோபிநாத்
சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.
சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) ஆராய்ச்சி துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட உதவும், உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. இந்த நிதியத்தின் தலைவராக கடந்த 2018ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.
கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்துவந்த விடுமுறை முடிவடைய உள்ளது. இதனால் அவர் நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளதாவது:
சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவரான கீதா, பெருந்தொற்றின்போது விமர்சன பகுப்பாய்வை எழுதி வரலாறு படைத்தார். கோவிட் தொற்றால் ஏற்பட்ட பெரும் மந்தநிலைக்குப் பின், மோசமான பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்லும்போது அவருடைய கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தைப் பற்றிய அவரின் ஆழமான அறிவிலிருந்து நாங்கள் பெரிதும் பயனடைந்தோம்.
கோவிட் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. காலநிலை மாற்றம் குறித்த கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய சர்வதேச நிதியத்துக்குள் ஒரு காலநிலை மாற்றக் குழுவை அமைக்க அவர் உதவி செய்தார். இவ்வாறு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.