அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டவர் வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.கடும் கூட்ட நெரிசல், அமளியைத் தொடர்ந்து, தனியார் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கவுன்சிலின் இந்த மாதத் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னை அவர் சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் உள்ள சூழ்நிலை குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர் விவாதித்துள்ளார்.