ஷூ அணிய கூட நேரமில்லாமல் வெளியேறினேன்: அஷ்ரப் கனி
காலில் ஷூ அணியக் கூட நேரமில்லாமல், அவசரம் அவசரமாக ஆப்கனில் இருந்து வெளியேறியதாக, அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன், அஷ்ரப் கனி பெட்டி பெட்டியாக பணத்துடன் தப்பி ஓடி விட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், அபுதாபியில் தஞ்சம் அடைந்துள்ள அஷ்ரப் கனி, 'பேஸ்புக்' வலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அமைதி ஒப்பந்தப்படி, தலிபான்கள் காபூலுக்குள் நுழையக் கூடாது. ஆனால் அதை மீறி அவர்கள் நுழைந்தனர். அங்கு நான் தொடர்ந்து இருந்தால், ராணுவத்திற்கும் தலிபானுக்கு போர் மூண்டிருக்கும். லட்சக்கணக்கானோர் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டிருக்கும். இதை தவிர்க்கவே நான் ஆப்கனில் இருந்து வெளியேறினேன். காலில் ஷூ அணியக் கூட நேரமில்லாமல், காபூலை விட்டு அவசரமாக வெளியேறினேன்.
வெறுங்கையுடன் சென்ற என்னை, பெட்டி நிறைய பணம் எடுத்துச் சென்றதாக அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். நான் காபூலில் தொடர்ந்து இருந்தால் 1996ல், தலிபான்கள், முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லாவை பொது இடத்தில் துாக்கிலிட்டது போல என்னையும் துாக்கி லிட்டிருப்பர். ஆப்கனில் அமைதியான ஆட்சிக்கு, தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன். நான் மீண்டும் ஆப்கன் திரும்புவது குறித்து பேசி வருகிறேன்.இவ்வாறு அஷ்ரப் கனி கூறியுள்ளார்.