மைத்திரி நிராகரிக்கப்படுவதற்கு நான் பொறுப்பல்ல

01.04.2024 00:50:11

பொதுஜன ஐக்கிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தலைமைத்துவ சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ஏற்க மறுக்கின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு என்னை பதவி நீக்கியமையை ஏற்றுக் கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்டத்துக்கு முரணாக என்னை பொருளாலர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். பொதுஜன ஐக்கிய முன்னணிவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கவில்லை என்பதே என்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். ஆனால் இந்த கூட்டணி ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது.

எனினும் இந்த கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தலைமைத்துவ சபையில் இணைத்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகின்றன. இதற்கு என்னால் எதையும் செய்ய முடியாது.

கட்சி, தலைமைத்துவம் மற்றும் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்கவே நான் முயற்சிக்கின்றேன். எமது கட்சியில் அரசியல் சபை மத்திய செயற்குழு, நிறைவேற்றுக்குழு என்பன காணப்படுகிறன. அவ்வாறிருகையில் விசேட கூட்டமொன்றுக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விசேட கூட்டமொன்றில் எந்த வகையிலும் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாது.

அந்த வகையில் சட்டத்துக்கு முரணான நடவடிக்கையாகும். எனினும் அவரது இவ்வாறான நடவடிக்கைகளில் புதுமையடைவதற்கு ஒன்றுமில்லை. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து வினவிய போது, நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் குறித்து கேட்டறிவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்றார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் நாமும் அந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். மைத்திரிபால சிறிசேன எதிர்த்து வாக்களித்தார். அவ்வாறிருக்கையில் அது தொடர்பில் சுதந்திர கட்சியின் விசேட குழு கூட்டத்தில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? 140 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கையளிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற மோசமான நிலைக்கு கொண்டு வந்ததற்கான பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவே ஏற்க வேண்டும்.

அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மாத்திரம் ஒதுங்கிக் கொள்ளப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது எவருடையதும் தனிப்பட்ட சொத்து அல்ல. கட்சியை எதிர்காலத்தில் பலப்படுத்தி மீண்டும் ஆட்சியமைக்கக் கூடிய கட்சியாக கட்டியெழுப்புவோம் என்றார்.