சிறிலங்காவின் நிலைப்பாடு அனைத்துலக அரங்கில்..

14.09.2022 10:02:00

 

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், எனினும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெளிவாக வெளிப்படுத்தியுள்ளாரென வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்வதேசத்திற்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சாந்த பண்டார தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சிறிலங்காவின் நிலைப்பாடு

“சிறிலங்கா அதிபர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தான், ஜெனிவாவில் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும் கடந்த கால செயற்பாடுகளில் குறிப்பாக எமது நாட்டில் மனித உரிமை தொடர்பாக நாட்டிலுள்ள பல்வேறு கோணங்களில் பார்ப்பவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் செயற்பாடுகளால் தான், சர்வதேசத்தில் இலங்கை பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையின் போது பல அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது.

ஆகவே தற்போது அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது” என்றார்.