அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

23.01.2022 09:15:33

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

 

இதனால் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரியும், இதுவரை நிவாரணம் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.

 

வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.

 

அதன்படி நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, கும்பகோணம், பாபநாசம், பேராவூரணி, திருவையாறு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

 

காமராஜ் எம்.எல்.ஏ.

 

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

 

ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.

 

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

 

இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் நாகை,

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.