சிறிலங்கா அரசாங்கத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!

10.01.2023 09:56:49

சிறிலங்கா அரசாங்கத்துடன் இன்று இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, அரசின் உறுதியான நடவடிக்கைகளை அடுத்தே பேச்சுவார்த்தையை தொடர்வதா? இல்லையா? எனத் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் நேற்று முடிவெடுத்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

நேற்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரொலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ரெலொ செயலாளர் ஹென்றி மகேந்திரன், மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

“வடக்கு  கிழக்கில் தொடரும் காணி அக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள காணி, காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

இவை தொடர்பில் அரசிடம் இருந்து ஒரு வாரத்தில் உறுதியான பதில் வேண்டும்” என சிறிலங்கா அரசாங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அரசுடனான கூட்டத்தில் வலியுறுத்த தமிழ்க் கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்குமா? இல்லையா? நடக்கும் என்றால் என்ன அடிப்படையில் என்பதையும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு இடையே அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தத் தீர்மானிக்கப்பட்டதாக ரொலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பிலான முன்னேற்றங்களை அரசு அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக இன்றைய சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

 

 

அத்துடன், அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இன்று பேசப்படும். அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை ஏற்கனவே இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, காவல்துறை அதிகாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துவோம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்பு மற்றும் அரசியலமைப்பில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டால் அடுத்த கட்டமாக இறுதித் தீர்வு குறித்துப் பேசுவோம்.

இறுதி அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாங்கள் வலியுறுத்துவோம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசுடன் இதுவரை நடைபெற்ற சந்திப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

 

 

 

அரசு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது சிறிலங்கா அதிபரிடம் கண்டிப்பாகத் தெரிவித்தனர்.

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் வரைபொன்றை இன்று ஜனவரி -10 ஆம் திகதிக்கு முன் அரசு தர வேண்டும். அவ்வாறில்லையேல் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று 10ஆம் திகதி அரசாங்கம் தமிழ்த் தரப்பு இடையே இடம்பெறும் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் அரச தரப்பில் அதிபர், பிரதமர், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் மேலும் சிலரும் பங்கேற்கலாம் எனக் கருதப்படுகிறது.

 

 

 

 

தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ளதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் எனத் தெரியவருகிறது.