அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பழிவாங்கும் செயல்

20.01.2022 09:58:48

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  

 

 

முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், எடப்பாடி நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. 

 

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதையும் அண்மையில் தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் நடைபெற்றுவரும் ஊழல்களை மறைக்கும்  விதமாக இந்த பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகிறது.

 

குறிப்பாக அண்மையில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. ஏன் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த அனைத்து பொருட்களும் சென்றடையவில்லை.

 

அதே போல நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற பொருட்களின் அளவு குறைந்தும் தரமற்றதாகவும் வினியோகிக்கப்பட்டது. 

 

பொங்கல் பரிசு வழங்கபடும் கரும்பிற்கு ரூபாய் 33 விலை நிர்ணயம் செய்து அரசு அறிவித்த போதும் விவசாயிகளுக்கு 16 ரூபாய் மட்டுமே கிடைத்தது என பல விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். 

 

சுமார் 1300 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த போதும் சுமார் 500 கோடி மதிப்பில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

 

இதுபோன்ற பெரியதொரு ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 

அதேபோல் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த நிர்வாக திறமையற்ற திமுக அரசு தவறிவிட்டது. குறிப்பாக மக்களிடத்தில்  போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிய இந்த அரசு அதனை மூடி மறைக்கும் வகையிலும், மக்களை திசை திருப்பும் நோக்கிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறது.

 

 அதன் ஒரு பகுதியாகவே இன்று முன்னாள் அமைச்சர் அன்பழகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அவதூறு செய்தியை பரப்பி மக்களை திசை திருப்பும் தி.மு.க.வின் அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது எனக் கூறினார்.