வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு.

28.05.2025 08:55:40

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது  யாழ். மாவட்டத்தில் காணப்படும்  குடிநீர் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு அதிகளவில் செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இங்கு  இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை  மக்கள் எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

 

அத்துடன் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர்  வலியுறுத்தியிருந்தார்.