நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணியில் இரண்டு புதுமுக வீரர்கள்!

25.02.2023 23:59:14

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், தலா மூன்று ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில், விளையாடுவதற்காக, நியூஸிலாந்து செல்லவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.

இந்த எதிர்பார்ப்பு மிக்க அணியில், சமீபத்திய முதற்தர கிரிக்கெட்டில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க மற்றும் 26 வயதான வேகப்பந்து வீச்சாளரான மிலன் ரத்நாயக்க ஆகியோருக்கு முதல் டெஸ்ட் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை டெஸ்ட் அணிக்கு சாமிக்க கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, நிஷான் மதுஷ்க, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, சமிக கருணாரத்ன, கசுன் ராஜித, லஹிரு குமார, அஷித்த பெணார்டோ, விஷ்வ பெணார்டோ, மிலன் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி மார்ச் 9ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 17ஆம் திகதி வெலிங்டனிலும் ஆரம்பமாகவுள்ளது.