
பரஸ்பர உறவையே விரும்புகிறோம்;
”இந்தியாவுடன் பரஸ்பர உறவை விரும்புவதாக” பிரதமர் மோடிக்கு பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு, இந்தியா – வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் அவரது கட்சியான அவாமி லீக் தடை செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த பங்களாதேஷ் அரசு, தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இச் சூழலில், பக்ரீத் பண்டிகையையொட்டி பங்களாதேஷ் மக்களுக்கும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ்க்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஷ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதலும் இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாகவும், தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது எனவும், இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.