மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை - இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

17.07.2022 11:27:38

மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை என இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்

காஞ்சீபுரம் கா.மு.சுப்புராய முதலியார் மேல்நிலைபள்ளியில் தியாகம் போற்றுவோம் இயக்கத்தின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர் சிவதாணுபிள்ளை மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்த அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவருடன் உரையாடினார்.

ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்று தராமல் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த பாட திட்டங்கள் தேவை. மாணவர்களுடைய கற்பனை திறன், விடாமுயற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவித்தால் நாடு மிக பெரிய வளர்ச்சி பெறும்.இன்னும் 2 ஆண்டுகளில் ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள நிலைப்புள்ளியில் இந்த செயற்கைக்கோள் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரத்தை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.