கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை

10.11.2022 08:05:07

பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான மாபெரும் புரட்சிக்குப் பிறகு, கியூபாவில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து 1962-ம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான வர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார கட்டுப்பாடுகளுடன் கூடிய தடைகளை கியூபா மீது அமெரிக்கா விதித்தது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவிக் காலத்தில் கியூபாவுடனான பதட்டங்களைத் தணிக்க கணிசமான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் அடுத்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கியூபா மீதான பொருளாதார தடைகளை மீண்டும் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டார். இந்த நிலையில் ஐ.நா. சபையில் அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக கியூபா வரைவு தீர்மானத்தை சமர்ப்பித்தது. இந்த தீர்மானத்தை ஆய்வு செய்யும் கூட்டத்தில் சிங்கப்பூர், டொமினிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 185 நாடுகளின் பிரதிநிதிகள், கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்தன. அதே சமயம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. பிரேசில் மற்றும் உக்ரைன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது.