
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க அரசாங்கம் முன்வர வேண்டும்!
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதிக்கப்படாமலே சபாநாயகரால் நிராகரிக்கப்படும் என சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணயை கொண்டுவரும் உரிமையை நிராகரிக்காமல், அதன் உள்ளடக்கம் தொடர்பில் விவாதிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். |
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான விவதாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர். பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த பொறுப்புக்களை பரிசீலிக்கும் ஒருமுறைதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகும். இதற்கு முன்னர் இந்த பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதேபோன்று 1981இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது. அவர் பாராளுமன்றத்தில் ஒரு பதவியை வகித்தவர். அந்தவகையில், பிரதி அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சியினால் முறையாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவர முடியாது, நிலையியற் கட்டளைகளில் அவ்வாறு எதுவும் இல்லை என்று ஊடகங்கள் மூலம் பாரிய பிரசாரம் இடம்பெற்று வருகிறது. ஆனால் நிலையிற் கட்டளையில் அமைச்சருக்கு எதிரான, அரசாங்கத்து்கு எதிரான, பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது குற்றப்பிரேரணை தொடர்பில் எங்கும் தெரிவிக்கப்பட்டதில்லை. அப்படியிருக்கையில் பிரதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதிக்கப்படாமலே சபாநாயகரால் நிராகரிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாகர் இந்த விடயத்தை தெரிவித்திருப்பார் என நாங்கள் நம்புவதில்லை. அப்படியில்லாவிட்டால், அரசாங்கத்தில் யாராவது தெரிவித்திருக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சிகளை மறைத்தார் என்றும் விசாரணைகளை தாமதப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தார் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ஒருவர், நாட்டின் பிரதி பாதுகாப்பு அமைச்சுப்பதவி வகிப்பது தொடர்பில் கேள்வி எழுப்ப, பாராளுமன்றத்துக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும்போது, அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்காமல் நிராரிப்பதற்கான தேவை இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால் நம்பி்க்கையில்லா பிரேரணை ஒன்றை விவாதிக்காமல் ஏதாவது காரணம் ஒன்றை தெரிவித்து நிராகரிப்பதாக இருந்தால், அது பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பான அறிவீனமாகும். அதேபோன்று பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்துக்கு இருக்கும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகும். அதனால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் உரிமையை நிராகரிக்காமல், அதன் உள்ளடக்கம் தொடர்பில் எங்களுக்கு விவாதிக்க முடியும். அதுதொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றார். |