இஸ்ரோவிற்கு புதிய தலைவர் நியமனம்!

09.01.2025 08:01:35

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்து வருபவர் சோம்நாத். இவரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்புகள் மையத்தின் (L.P.S.C.) எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக தற்போது பணியாற்றி வருகிறார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் 11வது தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வி. நாராயணனுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

சந்திரயான் -2, சந்திரயான் -3, அதியா எல்- 1, ககன்யான் திட்டம் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணனின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும். நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.