பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விட மோசமானது!

22.12.2025 15:40:40

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச்சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்க்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் வலியுறுத்தியும், அச்சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கிலும் கடந்த காலங்களில் நாடு முழுவதும் கையெழுத்துப்போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பயங்கரவாதத்தடைச்சட்ட்ம மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கங்களை விடவும் மோசமான விடயங்கள் இப்புதிய வரைவில் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.

தேசிய மக்கள் சக்தி எதிரணியாக இருந்த வேளையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் அதேவேளை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிரத்யேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்ததாகத் தெரிவித்த சுமந்திரன், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றதே தவிர, பிறிதொரு சட்டத்தின் ஊடாக அச்சட்டம் பதிலீடு செய்யப்படும் எனக் கூறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதிதாகப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், ஆகவே அச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத் முற்றாக எதிர்ப்போம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி நீதியமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவின் உள்ளடக்கங்கள் மிகமோசமானவையாக இருப்பதாகவும், அவைபற்றி விரிவாக ஆராய்ந்து தமது கரிசனைகளை வெகுவிரைவில் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.