'பதான்' விவகாரம் : குரைப்பார்கள்… கடிக்கமாட்டார்கள்…!
'பதான்' திரைப்படத்தை தடை செய்யவும், புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர் , சும்மா ‘குரைப்பவர்கள்’ மட்டும் தானே தவிர, ‘கடிக்கமாட்டார்கள்’ என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் நடித்துள்ளனர்.
பதான் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 419 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் பதான் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடம் பிடித்ததோடு சல்மான்கானின் 'பஜ்ரங்கி பைஜான்' மற்றும் அமீர்கானின் 'தங்கல்' ஆகிய படங்களின் வசூலையும் தாண்டியுள்ளது.