நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா!

10.04.2025 10:10:46

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார்.

64 வயதான அவர் சிறப்பு தனி விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

 

அவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) காவலில் எடுத்து விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நாடு கடத்தல் பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.