ரஷ்யாவின் போர் யுக்தியை தகர்த்தெறியத் தயாராகும் உக்ரைன் - துல்லிய தாக்குதல்களுக்கான பின்னணியில் பிரித்தானியா!

28.11.2022 11:41:19

ரஷ்யாவுடனான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஏவுகணைகளை வழங்கி பிரித்தானியா ஆதரவு வழங்கியுள்ளது.

ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கான மிக முக்கியமான ஆதரவு நாடாக பிரித்தானியா திகழ்ந்து வருகிறது.

ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்த நெருக்கடியான சூழ்நிலையில் கூட அப்போதைய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உக்ரைனுக்கு சென்று பிரித்தானியாவின் வலுவான ஆதரவை பதிவு செய்தார்.

நேரடியாக சந்தித்த ரிஷி சுனக் ஜெலென்ஸ்கி

இதையடுத்து பிரித்தானிய அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாறுதலுக்கு பிறகு, நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கும் சமீபத்தில் உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முதல் முறையாக உக்ரைனுக்கு ஹெலிகொப்டர்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பி வைத்தது.

உக்ரைனுக்கான ஆதரவை பிரித்தானியா தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் தற்போது உக்ரைன் படைகளுக்கு பிரிம்ஸ்டோன் 2 ஏவுகணைகள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த பிரிம்ஸ்டோன் 2 ஏவுகணைகள் முதலில் வான்-தரை தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இவை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின் படி, உக்ரேனிய ஆயுதப்படைகள் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளை குறிவைக்க அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் உக்ரைன் படைகளுக்கு ஆயுதம் வழங்க பிரிம்ஸ்டோன் 2 ஏவுகணைகள் அனுப்பப்படும் காணொளியையும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.