முதல்வருக்கு சி.பி.ஆர் அட்வைஸ்?!.
தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் அரசியல் கட்சியாக காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது.
இதனால் காங்கிரஸை திமுக மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தது. குறிப்பாக பதவிக்காக காங்கிரஸ் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஒருபக்கம் காங்கிரஸ் தவெகவின் அமைச்சரவையிலும் இடம் பெற்று விட்டது. மேலும், பிரவீண் சக்ரவர்த்திக்கு எம்.பி.பதவியையும் தவெக கொடுத்திருக்கிறது. அனேகமாக வருகிற எல்லா தேர்தலிலும் காங்கிரஸ் தவெக கூட்டணி தொடரும் என்றே கணிக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் முதல்வர் விஜய் சமீபத்தில் டெல்லி சென்றார். அப்போது துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்து பேசினார்..
அப்போது ‘காங்கிரஸை நீங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை பாஜக மேலிடம் விரும்பவில்லை.. அவர்களுக்கு ஒரு எம்பி பதவியும் தூக்கி கொடுத்திருக்கிறீர்கள்’ என சி.பி.ஆர் தரப்பு சொன்னதாக சொல்லப்படுகிறது. அதற்கு முதல்வர் விஜய் ‘ தொடக்கத்திலிருந்தே எங்களுடன் கூட்டணி வைப்பது பற்றி பிரவீண் சக்ரவர்த்தி எங்களிடம் பேசி வந்தார்.. அவருக்காகவே அந்த எம்.பி. பதவி கொடுக்கப்பட்டது’ என விஜய் கூறியிருக்கிறார்.
அதற்கு ‘இந்த விளக்கத்தை டெல்லி மேலிடம் புரிந்து கொள்ள மாட்டார்கள். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் ஏழு மேயர் பதவிகளை உங்களிடம் கேட்கப் போவதாக தெரிகிறது.. ஊரக உள்ளாட்சி பதவிகளில் 20 சதவீத ஒதுக்கீடு கேட்க போகிறார்கள். தமிழ்நாட்டில் உங்களை பயன்படுத்தி காங்கிரஸ் தங்களை வளர்த்துக் கொள்ள திட்டமிடுகிறார்கள்.. பாஜக மேலிடம் அதை ஒருபோதும் ரசிக்காது.. தமிழகத்தில் நீங்கள் காங்கிரஸுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கு அவசியம் இல்லை. காங்கிரஸுக்காக நீங்கள் ஏன் டெல்லியை பகைத்துக் கொள்ள வேண்டும்?’ என்று சொல்ல விஜய் அமைதியாக கேட்டுக்கொண்டாராம்.