ஈரான், இலங்கைக்கு வழங்கியுள்ள வாக்குறுதி

07.08.2023 10:11:35

இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று (06) தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈரான் - இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு ஆணைக்குழு மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

,அதேநேரம் ஏகாதிபத்திய மற்றும் சுயநல வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் இலங்கை கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனுடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான்-இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு, கூட்டுத் தூதரகம் மற்றும் சுற்றுலா ஆணைக்குழுக்களின் கூட்டங்களை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் ஆசியாவின் நுழைவாயிலான இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானிய நிறுவனங்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் மத்திய வங்கியின் ஆளுநர் மொஹமட் ரீஸா ஃபார்சின், வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரியையும் சந்தித்துள்ள நிலையில், இரு நாடுகளின் வங்கிகளுக்கிடையிலான உறவுகளின் வளர்ச்சியும் பொருளாதார உறவுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.