மேயர்கள், தலைவர்கள் பதவியை பிடிக்க தீவிரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த கட்டமாக வருகிற 4-ந்தேதி மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
அனைத்து மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் பதவிக்காக உள்கட்சிக்குள்ளேயே நடக்கும் பேரங்களும், அதிரடிகளும் இந்த தேர்தல் களத்தையும் அதிர வைத்துள்ளன.
பொது மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற போது வாக்காளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணபரிசு கிடைத்தது.
இப்போது தேர்தல் முடிந்து விட்டது. வேட்பாளர்களாக களம் இறங்கும் கவுன்சிலர்களுக்கு இப்போது ‘ஜாக்பாட்’.
பதவிக்கு தேவையான எண்ணிக்கையில் கவுன்சிலர்களை வளைக்க நாளுக்கு நாள் பேரம் எகிறி வருகிறது. சில பெரிய மாநகராட்சிகளில் மேயருக்கு வாக்களிக்க ஒரு ஓட்டுக்கு லட்சக்கணக்கிலும் கோடி கணக்கிலும் பேரம் நடக்கிறது.
தி.மு.க.வுக்குள்ளேயே மேயருக்கு 2 பேருக்கு மேல் முயற்சிப்பதால் எனக்கு வாக்களித்தால்....! என்று இப்போதே ஆசை காட்டி வைத்துள்ளார்கள். ஆனால் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவித்து விட்டால் இவர்களின் கனவு கோட்டை என்னவாகும்....?
ஒரு மாநகராட்சியில் ஒரு கவுன்சிலருக்கு ரூ.50 லட்சம் வரை பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு மாநகராட்சியில் ரூ.50 லட்சம் பணம் 5 சென்ட் இடம் பேசி வைத்துள்ளார்களாம்.
பேரத்தோடு நின்றுவிடவில்லை. கவுன்சிலர்கள் சொந்த ஊரில் இருந்தால் மற்றவர்கள் மனதை கலைத்து விடலாம் என்று கருதி ஊட்டி, கொடைக்கானல், மைசூர், கேரளாவில் தங்க வைத்துள்ளார்கள்.
மாநகராட்சி, நகராட்சி தேர்தல்தான் இப்படியென்றால் மதுரை அருகே உள்ள பரவை பேரூராட்சி தலைவர் தேர்தல் பரபரக்கிறது.
இந்த பேரூராட்சியில் மொத்த இடம் 15. அதில் அ.தி.மு.க.வுக்கு 8, தி.மு.க.வுக்கு 6, சுயேச்சை ஒன்று. சுயேச்சையின் ஆதரவு தி.மு.க.வுக்கு கிடைத்து விட்டது. இன்னும் ஒரு கவுன்சிலர் ஆதரவு கிடைத்தால் தி.மு.க. பதவியை பிடித்து விடும்.
எனவே அ.தி.மு.க.வில் இருந்து யாரையும் உருவிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் 8 பேரையும் கேரளாவில் தங்க வைத்துள்ளார்கள். இருந்தாலும் அவர்களின் குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சம் பணம், 20 சென்ட் இடம் என்று ஆசை காட்டி வருவதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். 4-ந் தேதி இந்த பரபரப்பு இதே வேகத்தில் தான் இருக்கும்.