திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

25.07.2022 11:24:57

போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று டிஐஜி சத்யபிரியா கூறினார்.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார்.

பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.