“பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது”.

08.05.2026 08:08:16

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வருகிறார். அதன்படி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார். இதில் காங்கிரஸ் மட்டும் ஆதரவு கொடுத்துள்ளது.

அதே சமயம், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்கள் உடன் கூட்டங்களை நடத்தின. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தொலைப்பேசி வாயிலாக ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “இந்த விவகாரத்தில் குதிரை பேரத்தை அனுமதிக்க முடியாது. ஆட்சியமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம் ஆகும். அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க உரிமை கோரி என்னைச் சந்திக்க வருவோரிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். ஆட்சியமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் உள்ளனரா? என்பது தான் எனது கேள்வி” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம், செய்தியாளர் அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பீர்களா? என எழுப்பிய கேள்விக்கு, “அப்படி வரும் போது அவர்களுக்கான எண்ணிக்கை இருக்கிறதா என்பதைப் பரிசீலனை செய்து முடிவெடுப்பேன். பதவிப்பிரமாணம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் சூழல் அப்படி இல்லை. 118 என்ற எண்ணிக்கையை இன்று கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன். தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க முடியாது. எனவே பெரும்பான்மையுடன் விஜய் வந்தால் ஆட்சி அமைக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.