டெக்சாஸில் வெடித்த அனுமன் சிலை சர்ச்சை!

19.02.2026 13:58:43

டெக்சாஸில் அமைந்துள்ள அனுமன் சிலை குறித்து குடியரசு கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சுகர் லேண்ட்(Sugar land)பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ அஷ்டலட்சுமி கோயிலின் 90 அடி பிரம்மாண்ட அனுமன் சிலை குறித்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த்(Dallas fort Worth) பகுதியை சேர்ந்த குடியரசுக் கட்சி நிர்வாகியும், மாகா(MAGA) அமைப்பின் ஆதரவாளருமான கார்லோஸ் டர்சியோஸ்(Carlos Turcios) சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் 90 அடி உயர அனுமன் சிலை வீடியோவுடன் வெளியிட்ட பதிவு ஒன்றில், இது ஒன்றும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அல்லது இந்தியாவின் டெல்லி கிடையாது. இது அமெரிக்காவின் டெக்சாஸின் சுகர் லேண்ட். டெக்சாஸையும், அமெரிக்காவையும் மூன்றாம் உலக அந்நியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சிலையாக இந்த அனுமன் சிலை ஏன் இருக்க வேண்டும்? ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் என்று சாடியுள்ளார்.

கார்லோஸ் டர்சியோஸ் கருத்துக்கு பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்காவின் அடிப்படை விழுமியங்களான மத சுதந்திரம் குறித்து கார்லோஸுக்கு நினைவுப்படுத்தி வருகின்றனர்.

இந்திய - அமெரிக்கா சமூகம் டெக்சாஸின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை குறிப்பிட்டதுடன், இன வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.