அ.தி.மு.க. யாருக்கு? - தீவிரம் அடையும் மோதல்!

21.12.2022 17:05:48

2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சமர்ப்பித்த கணக்குகள் ஏற்கபட்டது.

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல சோதனைகளை கண்டது. தற்போது அந்த கட்சி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தலைமையில் 4 ஆக பிரிந்துள்ளது.

இதில் டி.டி.வி.தினகரன் மட்டும் அ.ம.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நீடிப்பதாக அறிக்கை வெளியிட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியது. மூத்த நிர்வாகிகள் பலரும், பெரும்பாலான முன்னாள் அமைச்சர்களும், பல எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.