விஜய் குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு
'உறியடி', 'ஃபைட் கிளப்' படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் விஜய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது அதன் போது படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகனான விஜய் குமார் பேசுகையில், ''
'எலக்சன்' திரைப்படம் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்தின் கதைக்களம் தேர்தலாக இருந்தாலும்.. அது தொடர்பான கருத்துக்களை பார்வையாளர்களிடத்தில் வலிந்து திணிக்காமல் நாளாந்த வாழ்வில் அரசியலை ஒரு அங்கமாக பாவிக்கும் கதாபாத்திரத்தை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கியும் குடும்ப கதையாக இப்படம் தயாராகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அரசியலைப் பற்றிய பிரச்சாரத்தை செய்வர். ஆனால் படம் எந்த அரசியலையும் பிரச்சாரம் செய்யவில்லை.
அரசியலில் கொள்கைக்காகவும் , கட்சிக்காகவும் உழைக்கும் நிறைய தொண்டர்களும் உள்ளனர். அப்படி கட்சிக்காக உழைக்கும் தன்னலம் கருதாத மக்களுக்காக உழைக்க விரும்பும் கட்சி தொண்டனின் வாழ்வியலை பேசும் படைப்பாக இது உருவாகி இருக்கிறது.
மேலும் இது போன்ற நபர்களை உலகம் ஏமாளி என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும் முத்திரை குத்தும். இது கேட்கும் போது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நியாயமான ஆத்திரம் ஏற்படும். அந்த கோபத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நாயகனான நான் நடித்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தாலும் எந்தவித அரசியலையும் நேரடியாக பேசாமல் அரசியல் கட்சியில் பணியாற்றும் அடிமட்ட தொண்டர்களின் உள்ளடி அரசியலை பேசுகிறது.'' என்றார்.
திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் இயக்குநரின் மண் சார்ந்த அரசியல் பேசப்பட்டிருப்பதாலும், காட்சிகள்- வசனங்கள் உணர்வுபூர்வமாக இருப்பதாலும் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் இம்மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.