மக்களுக்கு அல்வா குடுக்காதீங்க!

20.08.2024 07:55:17

திமுக - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்த நிலையில் அதை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.
 

கலைஞர் 100 சிறப்பு நாணயத்தை வெளியிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்திருந்த நிலையில் திமுக - பாஜக ரகசிய உறவு வெளிப்பட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ”திமுக - பாஜக இடையிலான உறவை ரகசியமாக வைக்க வேண்டாம். வெளிப்படையாக சொல்லி விடுங்கள். மக்களுக்கு அல்வா குடுக்காதீர்கள்.
‘வெள்ள நிவாரணம் கொடுக்க வரவில்லை, ஆறுதல் சொல்ல வரவில்லை. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வர என்ன தகுதி இருக்கிறது?’ என்று பேசியவர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின். ஆனால் தற்போது கலைஞர் நாணயத்தை வெளியிடுவதற்காக ராஜ்நாத் சிங்கை அழைத்து வருகிறீர்கள்.

ராஜ்நாத் சிங்கிடம் நீட் தேர்வு ரத்து, வெள்ள நிவாரண நிதி பற்றி பேசியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு எங்க அப்பாவை திமுகவினர் கூட இப்படி பாராட்டமாட்டாங்க என ஒரு முதலமைச்சர் பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்வது. தமிழக உரிமையை அடமானம் வைத்து உங்கள் அப்பா பெருமை பாடுவதால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பதுதான் மக்களின் கேள்வி” என பேசியுள்ளார்.