'ஷாகீன்' புயல்: கனமழையால் வெள்ளக்காடானது மஸ்கட் நகரம்

04.10.2021 14:24:44

 ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ., தொலைவில் கடல் பகுதியில், நேற்று காலை மையம் கொண்டிருந்த ஷாகீன் புயல் தெற்கு மற்றும் வடக்கு அல் பத்தினா பகுதியில் கரையைக் கடந்தது. புயலால் பலத்த காற்று வீசியது; ஓமனின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்தது.
 

 

குறைந்த நேரத்தில் மிக கனமழை பெய்ததால், மஸ்கட் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம்போல் தேங்கின. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. பலத்த காற்றும் வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடல் பகுதியில் வழக்கத்தை விட அலைகள் 5 அடிக்கும் மேல் ஆர்ப்பரித்தன.
 

 

மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்; சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவசர சேவையில் உதவிட ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.