த.வெ.க. கட்சி கொடி
நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். இறுதியாக விஜய்யின் குரலில் ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் கட்டியின் பெயருக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “அரசியல் போருக்குச் சமமானது என்று சொல்வார்கள். போராக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் ஒரு கொடி வெற்றிக் கொடி பறந்தே ஆக வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அதனால் தான் கொடி என்றால் வீரத்திற்கும் வெற்றிக்கும் குறியீடாக மாறி இருக்கிறது. கட்சிக் கொடியைப் பற்றி யோசித்தபோது நமக்கு என்ன எல்லாம் தோன்றியது பகிர்ந்து கொள்ளத் தான் இந்த பதிவு. |
தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியில் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியில் இருப்பது அடர் சிவப்பு நிறம். பொதுவாகச் சிவப்பு என்பது புரட்சியின் குறியீடு. அடர் சிவப்பு நிறம் கட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சிந்தனைத் திறன், செயல், தீவிரம் குறிக்கும் வண்ணமாக உள்ளது. கட்சிக் கொடியின் நடுவே அமைந்துள்ள மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றலைத் தூண்டுதல் என இலக்கை நோக்கி ஓட வைக்கும் நிறம். இதனை மனதில் கொண்டு தான் கொடியில் இந்த இரண்டு வண்ணமும் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. போருக்குச் சென்று வெற்றியோடு திரும்புபவர்களுக்கு மன்னன் மற்றும் அவர்களுடைய படையும் வாகை மலரைச் சூடி வந்தார்கள் என்று செய்யுளில் படித்துள்ளோம். ஆனால் மன்னர் பெரும்பிடு முத்தரையர் போருக்குச் செல்வதற்கு முன்னதாகவே வெற்றியைக் கணித்து வாகை மலர் சூடி சென்றனர் எனவும் கூறப்படுகின்றது. அதனால் வாகை என்றாலே வெற்றி. அரச வாகை என்றாலே அரசனின் வாகை எனப்படும். தமிழக வெற்றி கழகத்தில் இடம் பெற்றுள்ள வாகை மலரானது தமிழக மக்களின் வெற்றியைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இந்த மண்ணின் வெற்றியைக் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய பலத்தைக் குறிக்க யானை பலத்தைச் சொல்வார்கள். யானை நிறத்திலும் குணத்திலும், உருவத்திலும், உயரத்திலும், தனித்தன்மை கொண்டதாக விளங்குகிறது. போர் யானை தன்னிகரற்றது. போர்த் தந்திரங்கள் பழகிய யானைகள் எதிரிகள் மற்றும் எதிரிகளின் தடைகளையும், படைகளையும் சுற்றி வளைத்து கில்லாடிகள். இந்த இரட்டை யானைகள் கட்சியின் கொடியில் உள்ளது. கொடியின் நடுவில் வாகை பூவை சுற்றி வென்றெடுக்க வேண்டிய செயல் திட்டங்களை எடுத்துக் கூறும் வகையில் 28 நட்சத்திரங்களும் உள்ளன். அந்த நட்சத்திரங்களைப் பச்சை மற்றும் நீல வண்ணத்தில் அமைத்துள்ளோம். நாம் அனைவரும் கட்டமைக்கக்கூடிய சமூக நல்லிணக்கத்தை அமைதி பூங்காவைக் குறிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். |