பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் அமெரிக்கா

20.11.2021 11:31:35

சீனாவில் அடுத்த ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு உயரதிகாரிகள் குழுவை அனுப்பாமல் புறக்கணிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

அடுத்த ஆண்டு பிப்., 4 - 20 வரை சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. வழக்கமாக ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா, அரசு உயரதிகாரிகள் குழுவை அனுப்பி வைக்கும். இந்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, ஜில் பைடன் தலைமையில் உயரதிகாரிகள் குழு சென்றது.

இதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உயரதிகாரிகள் குழுவுக்கு, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கணவர் டக் இம்ஹாப் தலைமை தாங்கினார். அதுபோல 'சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்கா உயர் அதிகாரிகள் குழுவை அனுப்புமா?' என, அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.


அதற்கு, '' குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு உயரதிகாரிகள் குழுவை அனுப்பாமல் புறக்கணிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்,'' என ஜோ பைடன் தெரிவித்தார். எனினும், ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என்றும் அவர் கூறினார்.

'சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும்படி அமெரிக்காவை சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.