ரூ.500 கோடி: ஜார்க்கண்ட்டில் பாஜக திட்டம் இதுதான்
ஜார்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். தனது அரசு குறித்துத் திட்டமிட்டு பாஜக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக விமர்சித்த ஹேமந்த் சோரன், இதற்காக பாஜக பல நூறு கோடி செலவழித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜக இருக்கிறது. |
ஜார்கண்டில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இரு தரப்பும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக முயல்கிறது. தனக்கு எதிராக சுமார் 500 கோடி செலவழித்து பாஜக மோசமான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக ஹேமந்த் சோரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்கு: மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவதன் மூலம் அரசியல் லாபம் அடைவதில் பாஜக நிபுணத்துவம் பெற்ற கட்சி என்றும் ஜார்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான ஹேமந்த சோரன் குற்றம் சாட்டினார். அதேநேரம் ஜார்க்கண்ட் மக்கள் இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உங்களுக்குள் வெறுப்பு உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் லாபம் அடைவதே இவர்கள் நோக்கம். இந்த முறையில் பிரச்சாரம் செய்வது எளிதானது.. பாஜக இதில் நிபுணத்துவம் வாய்ந்தது. ஆனால் நான் ஜார்கண்டைச் சேர்ந்தவன்.. எங்கள் கலாச்சாரம் இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காது. நான் எப்போதும் இதுபோல செய்ய மாட்டேன். ரூ. 500 கோடி: எனக்கு எதிராகப் பொய்களை கட்டவிழ்த்துவிடும் வெறுப்பு பிரச்சாரம் செய்யவும் பாஜக சுமார் ரூ. 500 கோடி செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கூட்டி வந்து சாலை நன்றாக இல்லை எனத் திட்டமிட்டுப் பேச வைத்துள்ளனர். இதுவும் பாஜகவின் புதிய வித்தை. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்துப் பேச மாட்டார்கள்.. மாறாகப் பொய்களால் உங்களைப் பயமுறுத்துவார்கள்" என்று சாடினார். அதாவது வேறு மாநில மக்களை ஜார்க்கண்ட்டிற்கு அழைத்து வந்து, அவர்களை மக்களுடன் மக்களாக இருக்க வைத்து தனது அரசு மீது பாஜக அவதூறு பரப்புவதாகச் சோரன் சாடியுள்ளார். மேலும், சமூக வலைத்தள பிரச்சாரத்திற்கும் பாஜக பல கோடி ரூபாய் பணம் செலவழித்து இருப்பதாகவும் சுமார் 95 ஆயிரம் வாட்ஸ்அப் க்ரூப்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட் தேர்தல்: ஜார்க்கண்ட்டில் மாநிலத்தில் மொத்தம் 81 இடங்கள் உள்ள நிலையில், 41 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். கடந்த நவ. 13ம் தேதி 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை மீதமுள்ள 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 2019 ஜார்க்கண்ட் தேர்தலில் யாரும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி 30 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வென்று இருந்தது. இதையடுத்து அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது. |