சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள்

11.11.2021 17:43:11

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிறுவனம் நிராகரித்த நிலையில் அத்தகைய தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் அதில் இல்லை என்று மூன்றாம் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சான்றிதழை Schutter Global Inspection and Survey Company வழங்கியுள்ளது. அறிக்கையின்படி, சோதனை செய்யப்பட்ட மாதிரியில் சால்மோனெல்லா, கோலிபார்ம் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை.ISO 4832-2006 இன் படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிறுவனம் இந்த உரம் பயன்படுத்துவதற்கு தகுதியற்றது என்று கூறியுள்ள அதேவேளை சீனா தொடர்ந்தும் அதனை நிராகரித்து வருகிறது.

இதனையடுத்து, இலங்கைக்கான சீனத் தூதுவர், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) மற்றும் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ(Sachindra Rajapaksa) ஆகியோரை கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். அந்த கலந்துரையாடலின் போதுதான் உர மாதிரிகளை மீண்டும் பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் ஒப்புக்கொண்டனர். எவ்வாறாயினும், உர மாதிரிகள் மூன்றாம் தரப்பினருக்கு பரிசோதனைக்காக வழங்கப்பட மாட்டாது எனவும் கப்பலை திருப்பி அனுப்புவதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.