அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு எதிரொலி
மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (09.09.2024) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் என 3 அலுவலர்கள் உள்பட 4 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
இது தொடர்பாக மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வரும் அரசின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில அலுவலர்களிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டாட்சியரும், ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒரு சுகாதார ஆய்வாளரும் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோர் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் இரண்டு விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது |