எலிசபெத் ராணியின் இந்தியப் பயணம்! ஜாலியன் வாலாபாக் முதல் மருதநாயகம் வரை...

09.09.2022 11:33:55

பிரிட்டன் ராணியாக இருந்து காலமான இரண்டாம் எலிசபெத் இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மிகவும் முக்கியத்துவம்

  • ராணியாக மூன்று முறை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
  • கமல ஹாசனின் மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்
  • காமராஜரை சந்தித்து பேசியுள்ளார், ஜாலியன் வாலாபாக்கில் அஞ்சலி செலுத்தினார்

 

  • இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவரது இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதில் நமது இந்தியாவும் அடங்கும். பிரிட்டன் ஆட்சி செய்த முக்கியமான காமன்வெல்த் நாடுகளில் இந்தியா ஒன்று. இரண்டாம் எலிசபெத் நான்கு முறை இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

முதல்முறை 1952ஆம் ஆண்டு வருகை புரிந்த போது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்றார். அந்த சமயத்தில் இளவரசியாக இரண்டாம் எலிசபெத் இருந்தார். இந்தியாவில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பை அவர் பல நாட்கள் பெருமையாக கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ராணியாக முடி சூடிக் கொண்டு 1961ல் முதல்முறை மன்னர் பிலிப் உடன் இரண்டாம் எலிசபெத் இந்தியா வந்தார்.

அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ராமலீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளுக்கு மத்தியில் உரையாற்றியது வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும்.

இந்த சமயத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் திறந்தவெளி காரில் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை கண்டு ரசித்தார். வாரணாசியில் யானை சவாரி மேற்கொண்டார். மேலும் மும்பை, வாரணாசி, உதய்பூர், ஜெய்ப்பூர், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்றார். சென்னையில் காமராஜரை சந்தித்தார். 1983ல் அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் அழைப்பின் பேரின் வருகை புரிந்திருந்தார்.

அப்போது அன்னை தெரசாவிற்கு ”ஆர்டர் ஆஃப் மெரிட்” கவுரவம் வழங்கியது வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். 1997ஆம் ஆண்டு சுதந்திர தின பொன்விழா ஆண்டை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் ராணி எலிசபெத் இந்தியா வருகை புரிந்தார்.

இம்முறை ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது, ”ஜாலியன் வாலாபாக் மிகவும் துயரமான சம்பவம். எங்களின் கடந்த காலங்களில் சில கடினமான அத்தியாயங்களும் இருந்ததாக” குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி நடிகர் கமல் ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், நடிகர் சிவாஜி, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் நடந்த நிகழ்வில் சுமார் 20 நிமிடங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 2015 மற்றும் 2018 ஆகிய காலகட்டங்களில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்த போது இரண்டாம் எலிசபெத் ராணியை சந்தித்தார். அப்போது தனது திருமணப் பரிசாக மகாத்மா காந்தி அளித்த கைக்குட்டியை காண்பித்தது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
 

  •