சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்கும் `Ford`

14.09.2024 08:38:37

சென்னையில் போர்ட் (Ford) தொழிற்சாலையை மீண்டும் இயக்கவுள்ளதாக  அந்நிறுவனம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் 17 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின் ஒரு அங்கமாக சிகாகோவில்  உலகப் புகழ் பெற்ற போர்ட் (Ford )மோட்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க போர்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் தொழில் தொடங்குவதற்காக அனுமதி கோரி தமிழக அரசிடம் போர்ட் நிறுவனம் கடிதமொன்றையும்  அளித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய போர்ட் நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க இருப்பது மாநிலத்தின் வாகனத்துறை சீராக மீண்டும் ஒன்றிணைவதை உறுதி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.