ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன்.

31.12.2023 10:32:46

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கருத்துருவாக்கத் தளத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தவர் மு. திருநாவுக்கரசு.அவர் அதனை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எழுதியிருந்தார். அதற்குரிய தர்க்கங்களை முன்வைத்து அவர் “பொங்குதமிழ்” இணையத் தளத்தில் ஒரு கட்டுரையும் எழுதினார்.அதன்பின் 2015 ஆம் ஆண்டும் ஒரு கட்டுரையை எழுதினார்.அதன் பின் 2019 ஆம் ஆண்டும் ஒரு காணொளியில் பேசியிருக்கின்றார்.ஆனால் அவருடைய கருத்தை எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதியோ கிரகித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவை ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது. அக்குழுவினர் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்க் கட்சித் தலைவர்களோடு உரையாடுவது என்ற முடிவை எடுத்தது. தமிழ் மக்கள் பேரவையின் நிதிப் பங்களிப்போடு சுயாதீனக் குழு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசியது. தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதற்குச் சம்மதிக்கவில்லை.ஏனைய கட்சிகள் சம்மதித்தன. விக்னேஸ்வரன் அப்பொழுதும் அதை ஆதரித்தார். இப்பொழுதும் ஆதரிக்கின்றார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தது சுரேஷ் ப்ரேமச்சந்திரன்.அதன் பின் அவர் சார்ந்த கட்சி இணைந்திருக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அகோரிக்கையை முன் வைத்தது.இப்பொழுது விக்னேஸ்வரன் அக்கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.ஒரு பொது வேட்பாளராக தேர்தலை எதிர்கொள்ளத் தான் தயார் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். இப்பொழுதும் தமிழரசுக் கட்சி அதற்கு ஆதரவாக இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.கஜேந்திரகுமார் அதற்கு முன்னரே மட்டக்களப்பில் வைத்து தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார்.

கஜேந்திரகுமார் கூறுகிறார்,தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்று கேட்பவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்பவர்கள் என்று. அவர்கள்,பிரதான சிங்கள வேட்பாளர்களில் யாரோ ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் தனது கட்சி ஆதரிக்காது என்றும்,எனவே தேர்தலைப் பரிஷ்கரிக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சாணக்கியன் கூறுகிறார் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானது என்று.

இந்த இருவருடைய கருத்துக்களையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். பொதுவான தர்க்கத்தின்படி,ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிச்சயமாக தேர்தலில் வெல்லப் போவதில்லை. ஆனால் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை அவர் சந்தேகத்துக்கு உள்ளாக்குவார் அல்லது சவால்களுக்கு உள்ளாக்குவார். தமிழ் மக்களின் 5 லட்சத்துக்கும் குறையாத வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைத்தால், எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் 50 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்கு போக வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்கள் எந்த சிங்கள வேட்பாளருக்கு தமது இரண்டாவது விருப்பத்தெரிவு வாக்கைக் கொடுக்கிறார்களோ, அவருக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். எனவே பிரதான சிங்கள வேட்பாளர்கள் தமிழ் மக்களோடு ஏதோ ஒரு டீலுக்கு போக வேண்டி வரும். அதைத்தான் கஜேந்திரக்குமார் ஏதோ ஒரு தரப்பை ஆதரிப்பது என்று வியாக்கியானம் செய்கின்றார்.