இலங்கையின் முக்கிய வளத்தை கைப்பற்றும் அமெரிக்கா !

14.07.2021 09:34:46

 

கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீதமான பகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாக அநுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் குழாய் கட்டமைப்பு, அதற்கான வாயு விநியோகம், களஞ்சியசாலை தொகுதி ஆகியவற்றை முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனமொன்றிடம் கையளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

எரிசக்தி வளத்தை கைப்பற்றுவோரே எதிர்காலத்தில் எமது நாட்டை ஆள முடியும்.

இந்நிலையில், திறைசேரி உள்ளிட்ட நான்கு அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் முக்கிய வளத்தில் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்த மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்து 300 மெகாவாட் LNG மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கான நிலையம் நிர்மாணிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டளவில் இங்கு 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.