மரணம், சிறை, வெற்றி பிரேசில் அதிபர் விரக்தி
“மரணம், சிறை அல்லது வெற்றி,” என, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தல் குறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பிரேசிலியா நகரில் நடந்த மதகுருமார்கள் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் போல்சனாரோ பேசியதாவது:என் எதிர்காலத்துக்கு மூன்று வழிகள் தான் உள்ளன. மரணம், சிறை அல்லது அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது ஆகியவை தான் அவை.என்னை எதிர்க்க இந்த பூமியில் யாரும் இல்லை. மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை. அதை ஏற்க மாட்டேன். ஓட்டுச் சீட்டு மூலம் தான் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக செப்., 7ல் நாடு தழுவிய போராட்டத்துக்கு அதிபர் போல்சனாரோ மதகுருமார்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2018ல் மதகுருமார்களின் ஆதரவால் தான் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தல் வரும் அக்., 2ல் நடக்கவுள்ளது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் முன்னாள் அதிபர் லுாயிஸ் இனசியோ சில்வா முன்னிலையில் உள்ளார்.
தற்போதைய அதிபர் போல்சனாரோ மீது ஏராளமான ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் சிறை செல்ல நேரிடும் என்பதால், அவர் சமீப காலமாக விரக்தியுடன் பேசி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போல்சனாரோ,'பிரேசில் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்' என்றார்.