’வைத்தியசாலையை மூடுவது சமுதாயத்தை அழிக்கின்ற செயல்’
தங்களின் தவறுகளை மூடி மறைக்க திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மூடி சமுதாயத்தை அழிக்கின்ற செயலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அந்த வைத்தியசாலையை மீண்டும் உடனடியாக திறக்க சுகாதார அமச்சரும் கிழக்கு மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. யான எஸ். ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 2 ஆம் நாள் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்திய ஸ்ரீதரன் எம்.பி. தொடர்ந்து பேசுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் வித்தியாலய மாணவன் ஜெயக்குமார் விதுர்ஜன் (16 வயது) கடந்த 2023 -03- 11 ஆம் திகதி காலை நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்றபோது திடீரென மயக்கமுற்றதால் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.
இந்த மாணவன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கிட்டத்தட்ட 3 மணிநேரமாக அந்த மாணவனுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லையென அந்த ஊர் மக்களும் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவர்களும் குறிப்பிடுகின்றனர். வைத்தியர்களின் அசமந்தப்போக்கே மாணவனின் மரணத்திற்கு காரணமென அந்த மக்கள் இன்றும் கொதித்துப்போயுள்ளனர். அதனால் அவர்கள் அந்த வைத்தியசாலைக்கு முன்பாக நிகழ்த்திய சில போராட்டங்கள் , உணர்வுகளை வெளிப்படுத்தியதன் காரணமாக வைத்தியசாலைக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஆனால் இன்று 11 நாட்களாக இந்த திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. மக்கள் கிழக்கு மாகாண ஆளுநரிலிருந்து சொல்லக்கூடிய அனைத்து தரப்பினரிடமும் இந்த விடயத்தை கூறியுள்ளனர். எமது அம்மாவட்ட எம்.பி.யான கலையரசன் கூட அதனை மீன்றும் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அந்த வைத்தியசாலையை இயங்க வைக்காமல் 11 நாட்களாக மூடப்படுள்ளது. சராசரி 340 க்கு மேற்பட்ட நோயாளர்கள் அந்த வைத்தியசாலைக்கு வந்து திரும்பி போயுள்ளனர்.