நக்கீரன் ஆசிரியருக்கு எதிராக அவதூறு.

06.06.2026 16:15:31

நக்கீரன் ஆசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பிய விவகாரத்தில் நேரில் ஆஜராக ஜக்கிவாசுதேவுக்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 26.10.2024 அன்று ஈஷா பவுண்டேஷன் நிறுவனத்தார் அவர்களது எக்ஸ் வலைதளத்தில் நக்கீரன் ஆசிரியர் குறித்து ஒரு அவதூறு செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதில், பல ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் ஈஷாவிடம் இருந்து பணம் பறிக்க முயற்சித்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் வளைந்து கொடுக்கவில்லை என்பதால் அவர் இப்போது எங்கள் அப்பாவி குழந்தைகளைப் பற்றி பொய்களைப் பரப்பி வருகிறார் என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளனர்.

    

 

இதனைத் தொடர்ந்து மாரிதாஸ் என்பவரும், டி.எம். விஸ்வநாத் என்பவரும் அவர்களது யூடியூப் சேனல்களிலும் வாட்ஸ் அப்களிலும் ஆசிரியர் நக்கீரன் கோபால் குறித்து மிக மோசமான அவதூறு செய்திகளை வெளியிட்டனர். இந்த செய்திகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நபர்களால் கூட்டு சதி செய்து வெளியிடப்பட்டவை என்றும் இது அவதூறுறானது என்றும் அவமானப்படுத்துவது என்றும், குற்றமுறு மிரட்டல் என்றும் புகார் தெரிவித்து நக்கீரன் ஆசிரியர், ஜக்கி வாசுதேவ், ஈஷா பவுண்டேசன், அறங்காவலர்கள் முரளி கிருஷ்ணா, சீனிவாசன், மா பிரதியுக்தா, மௌமிதா ஷென்சர்மா, ராஜரெத்தினம், மா ஜெயத்ரி, சுவாமி நித்தி ஆகியோர் மீதும் மாரிதாஸ், சி.எம்.விஸ்வநாத், கூகுள் நிறுவனம், எக்ஸ் நிறுவனம், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு எதிராகவும், இவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரியும் இரண்டாவது மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல்கட்ட விசாரணை நடத்தி புகார் மனுவில் கூறியிருக்கிற விவரங்கள்படி மாரிதாஸ் மீதும், சி.எம்.விஸ்வநாத் மீதும் மட்டும்தான் இந்த வழக்குஏற்றுக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டு அவர்கள் இருவருக்கும் எதிராக நீதிமன்ற அழைப்பாணை அனுப்ப ஆணையிட்டது. ஜக்கி வாசுதேவ் தொடங்கி சுவாமி நித்தி வரை உள்ள 9 குற்றவாளிகளுக்கு வழக்கு முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த தள்ளுபடி உத்தரவுக்கு எதிராக நக்கீரன் ஆசிரியர் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று (06.06.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை படித்துப் பார்த்து ஆவணங்களை ஆராய்ந்ததோடு, நக்கீரன் ஆசிரியர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை ஏற்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 9 பேரும் ஜூலை 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்