வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்
தயாரிப்பு : ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், அருள் டி. சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : விநாயக் துரை
மதிப்பீடு : 2/5
தமிழ் திரையுலகின் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்படும் தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ... இப்படத்தினை பார்த்து ரசித்து வெளியாவதற்கு உதவியுள்ளார். இவரது அவதானமும், படத்தின் கதைக்களமும் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் பண தேவை என்பது ஏற்படுகிறது. இவர்களிடத்தில் எதிர்பாராவிதமாக கோடிக்கணக்கிலான பணம் கிடைக்கிறது. இந்த பணம் உண்மையில் கடைசியாக யார் கையில் சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஏடிஎம் மிஷினில் காவலாளியாக பணியாற்றும் காவலாளியின் இளைய மகள் தனது காதலருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வாடகை வாகனத்திற்கு சாரதியாக பணியாற்றுகிறார். சில நாட்கள் கழித்து ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் தாய் வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு.. தந்தைக்குரிய கடமையை செய்ய, பைனான்சியர் ஒருவரிடத்தில் வட்டிக்கு பணம் வாங்குகிறார். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்து குறித்தும் , அத்துடன் அவரது தந்தை எடுத்து வந்த இரண்டு லட்சம் ரூபாய் காணவில்லை என்றும் மூத்த மகள் புகார் கொடுக்கிறார். அந்தப் புகாரின் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? விபத்துக்குள்ளான தந்தை காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? அவரைக் காப்பாற்றுவதற்காக தேவைப்பட்ட பணம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் திரைக்கதை.
தாயுடன் தனியாக வசிக்கும் இளம்பெண் ஒருவர் சற்று முதிர் கண்ணனாக இருக்கும் ஆண்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றி பணம் பறிக்கிறார்.
நண்பர்கள் இருவர் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக சிறிய சிறிய பண திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி.. வாங்கிய கடனை அடைப்பதற்காக புகார் தருபவர்களிடம் லஞ்சம் வாங்குகிறார்.
உடல் உறுப்புகளை மட்டுமே நம்பி அவர்களுக்கு நிதி உதவி செய்யும் பைனான்சியர் ஒருவருக்கும் நெருக்கடி ஏற்படுகிறது.
இந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் ஒரே தருணத்தில் பண தேவை ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில் தன்னை அவமானப்படுத்திய பைனான்சியர் வீட்டிலிருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் வாகனத்தின் மூலம் கை மாறுகிறது. இந்த பணத்தை கைப்பற்ற கதாபாத்திரங்கள் முயற்சிக்கிறது. இதில் யார் கையில் பணம் சென்றடைகிறது என்பது உச்சகட்ட காட்சி.
சுவாரசியம் குறையாமல் டார்க் கொமடி ஜேனரில் நேர்த்தியாக சொல்லப்பட வேண்டிய கதையை... இயக்குநரின் போதிய அனுபவமின்மையாலும்.. கதை சொல்லலில் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுவதாலும் ரசிகர்களை மகிழச் செய்யாமல் சோர்வடையச் செய்கிறது.
குறிப்பாக இளம் பெண் ஒருவர் பல ஆண்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றும் போது ... அதனை திரையில் சொன்ன விதம் அயர்ச்சியைத் தருகிறது.
இதே உத்தி... மற்றொரு கதாபாத்திரத்திற்கும் பயன்படுத்தும் போது படக்குழுவினரின் அனுபவமின்மை அப்பட்டமாக தெரிகிறது.
மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுவது எதிர்பாராமல் நடைபெறும் ஒரு சம்பவம். இதனையும் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் பயன்படுத்துவது.. இயக்குநரின் கற்பனை வறட்சியை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் ராஜேஷ் பாலச்சந்திரனின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. கதையின் நாயகனாக நடித்திருக்கும் சரண் தேஜ்ராஜ் மற்றும் அவரது நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார்கள். அறிமுக நடிகை சுவாதி மீனாட்சி இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
திரைக்கதையில் பகவத் கீதையின் பொன்மொழிகள் அத்தியாயங்களில் தலைப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விதத்திலும், காவல்துறை அதிகாரியின் குள்ளநரித்தனத்தை காட்ட ஹைனாவின் குரலை பயன்படுத்திய விதத்திலும் இயக்குநர் எம்மை கவர்கிறார்.
சிறிய முதலீட்டு திரைப்படம் என்பது படத்தின் ஒளிப்பதிவிலும் தெளிவாக தெரிகிறது. பின்னணி இசை சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது.
பணத்திற்கு பின்னால் அலையும் கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான படைப்பு என்றாலும்.. குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் மறுக்க முடியாத நிஜம். ஏனெனில் படத்தின் தொடக்க காட்சியிலேயே பணம் யார் கைக்கு கிடைக்கும் என்பது பார்வையாளர்களால் எளிதாக யூகித்து விட முடிகிறது.
வல்லவன் வகுத்ததடா- ஊசி போன வடை.