மியன்மார் இராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் பேஸ்புக் தடை!

26.02.2021 10:27:23

மியன்மார் இராணுவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் தடை விதித்துள்ளன.

இதுதொடர்பாக முகப்புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய நிலைமையை நாங்கள் நெருக்கடி நிலையாகக் கருதுகிறோம். அதனையும் அதற்குப் பிறகு நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, இராணுவம் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு முகப்புத்தகத்தில் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்துக்கும் பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த 1ஆம் திகதி கவிழ்த்தது.

இதன்போது அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் ஓராண்டுக்கு இராணுவ ஆட்சி தொடரும் எனவும் அதன்பின்னர் தேர்தல் நடைபெறும் எனவும் இராணுவம் அறிவித்தது.

ஆனால், இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது ஒருபுறமிருந்த மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இராணுவம் விதித்துள்ள தடையை மீறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். நடைபெற்று வரும் போராட்டத்தில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை 5பேர் உயிரிழந்துள்ளனர்.