மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 52 வெளிநாட்டினர் கைது
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இந்தோனேசியாவைச் சேர்ந்த 52 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.
மலேசியாவின் Kota Tinggi பகுதியில் ஒரு படகு Pasir Logok கடற்கரை நோக்கி சென்றதை கண்ட மூன்றாவது மலேசிய காலாட்படை பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் குடியேறிகளை நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த இராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உடனடியாக அக்கடற்கரையை நோக்கி இராணுவத்தினர் சென்றனர். அங்கு அதிகாலை 2.50 மணியளவில் 22 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.”
“பின்னர் 4 மணியளவில் அருகாமையில் இருந்த புதர்களில் மறைந்திருந்த 26 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.” பின்னர், 3 குடியேறிகள் தனியாகவும் ஒரு குடியேறி தனியாகவும் என மொத்தம் 52 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக மலேசிய குடிவரவு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.