தனிமைபடுத்தல் சட்டத்தை மீறியவர் வைத்தியசாலையில் அனுமதி!

15.08.2021 15:01:17

மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்துசபையில் சாரதியாக கடமையாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சட்டத்தை மீறி மட்டு பொதுச் சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்யவந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் அவரை பிடித்து கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது

இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவில்  சாரதியாக அம்பாறை கோமாரியைச் சேர்ந்த குறித்த நபர் மட்டக்களப்பில் தங்கியிருந்து கடமையாற்றி வருவதாகவும் அவருக்கு நேற்று சனிக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை வீட்டில் பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தினர்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (15) குறித்த சாரதி தனிமைபடுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பு பொது சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்யவந்த நிலையில் அவரை இனம் கண்ட பொது சுகாதா பரிசோதகர்கள் பிடித்து கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.