தமிழகத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்ப புதிய சிறப்பு ஏற்பாடு.

01.09.2026 08:39:57

இந்தியாவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவதற்கான நடைமுறையை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு புதிய சிறப்பு ஏற்பாட்டை உருவாக்கியுள்ளது. முறையான பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் போர்க்காலத்தில் இந்தியா வந்தவர்களும், உரிய சோதனைகளுக்கு பிறகு தன்னார்வமாக நாடு திரும்ப இந்த நடைமுறை வழிவகுக்கும்.

1983-ல் ஏற்பட்ட இன மோதல்கள் மற்றும் அதன் பின்னர் தீவிரமடைந்த உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தனர். சுமார் 30 ஆண்டுகள்ள் நீடித்த போர் 2009-ல் முடிவடைந்தது. 2002 முதல் 2022 வரை சுமார் 18,000 பேர் இலங்கைக்கு திரும்பிய நிலையில், இன்னும் சுமார் 90,000 பேர் தமிழ்நாட்டில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நடைமுறையின்படி, முதலில் இலங்கை தூதரகங்கள் மூலம் அகதிகளின் அடையாளம் மற்றும் இலங்கை குடியுரிமை உறுதி செய்யப்படும். அதன்பிறகு அந்நாட்டு அரசின் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்பு இல்லாதவர்கள் தேவையான சோதனைகளை கடந்தால் தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, சட்டப்பூர்வமான வழியில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த முடிவு, போருக்குப் பிறகு தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் பெரும் தடையாக இருந்த நிலையில், புதிய நடைமுறை அந்த பிரச்சினையை ஓரளவு குறைக்கக்கூடும்.