இரு நாட்களில் இரு நகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள்

10.08.2021 08:58:28

கடந்த இரு நாட்களில் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்கன் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஜோஸ்ஜன் மாகாணத்தின் முக்கிய நகரான ஷெபர்கானையும், தென்கிழக்குப் பகுதியின் முக்கிய நகரத்தையும் தலிபான்கள் கடந்த இரு நாட்களில் கைப்பற்றியுள்ளனர். ஷெபர்கான் நகரமே தலிபான்கள் தாக்குதலால் நிலைகுலைந்து உள்ளது. எனினும் ராணுவத் தலைமையிடம் மற்றும் விமான நிலையத்தை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கன் ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அமெரிக்க விமானப் படை, தலிபான்களின் நிலைகள் மீது பி52 ரக வெடிகுண்டுகளை வீசியும், ஏசி10 ரகத் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளனர். தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைய முடியாத படி அமெரிக்க ராணுவத்தின் எப்16 ரகப் போர் விமானங்கள் கண்காணிப்பில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.