எம்மை ஏமாற்ற இலங்கை அரசு நினைக்கவே கூடாது - சம்பந்தன்

15.09.2021 04:05:15

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஐ.நாவையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு இனியும் எண்ணக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்புப் பொறிக்குள் சிக்கவைத்துக் கடும் அழுத்தங்களைக் கொடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரின் வாய்மூல அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.