இன்று நாடாளுமன்ருக்கு வருகிறது அடுத்த வருடத்துக்கான பாதீடு !
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று(12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கும் பாதீட்டு உரை ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் 76ஆவது பாதீடு இதுவாகும்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடாகும்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதீட்டை சமர்ப்பிப்பதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதீட்டை முன்வைக்கும் முதலாவது சந்தர்ப்பமாகவும் இது வரலாற்றில் பதிவாகும்.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4,128 பில்லியனாகும்.
இன்று முதல், விவாதம் இடம்பெற்று இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் நாளான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், அனைத்து சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பனவற்றுக்கு அமைய, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
பாதீட்டு விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில், பொதுமக்கள் பார்வையாளர் பகுதி, பொதுமக்களுக்காகத் திறக்கப்படமாட்டாது.
அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மாத்திரம் பாதீட்டு குழுநிலையின்போது, அனுமதி வழங்கப்படவுள்ளது.
வெளிநாட்டு இராஜதந்திரிகளான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்காக, இன்று விசேட விருந்தினர் பகுதி திறக்கப்படும் என நாடாளுமன்ற செயலாயர் நாயகம் தெரிவித்துள்ளார்.