அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்., இபிஎஸ் அவசர ஆலோசனை

11.08.2021 15:02:34

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ. பி. எஸ். , இபிஎஸ் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் உருவாக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுகவும் தேர்தலை சந்திக்கும் வகையில் தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

அந்த கூட்டத்தில் 100க்கு 100 சதவீதம் ெவற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.